கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

அருப்புக்கோட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.

Update: 2022-12-01 18:45 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.

சந்தன மாரியம்மன் கோவில்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணிநகரம் உச்சி செட்டியார் தெருவில் சந்தன மாரியம்மன் கோவிலை சில மாதங்களுக்கு முன்பு சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இந்த கோவில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் கோவிலை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு வந்தனர். இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு கோவிலை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் உதவி சூப்பிரண்டு கருண்காரட், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பார்த்திபன், கிரேஸ்சோபியாபாய் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தபோது, கருப்பசாமி என்ற வாலிபர், ஒரு வீட்டின் 3-வது மாடிக்கு பெட்ரோல் கேனுடன் ஏறினார். அங்கு மாடி சுவரில் நின்று தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீயை பற்ற வைக்க முயன்றார். உடனே அதிர்ச்சி அடைந்த போலீசார் வீட்டின் மாடியில் ஏறி கருப்பசாமியை லாவகமாக மீட்டு கீழே இறக்கினர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் தங்களின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் அழைத்துச்சென்று தண்ணீர் ஊற்றி தடுத்தனர். அவர்களிடமிருந்த மண்எண்ெணய் கேன்களை பறிமுதல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இடிக்கப்பட்டது

அதனைத்தொடர்ந்து மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பரிகார பூஜை செய்து அம்மன் சிலையை மட்டும் வேறு இடத்துக்கு மாற்றினர். அதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்