பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
நாகை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பாரம்பரிய உடைகளை வாங்கி சென்றனர்.
நாகை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பாரம்பரிய உடைகளை வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகை
தமிழ் மாதங்களில் ஒன்றான தை மாதம் தமிழக மக்களின் சிறப்புக்குரிய மாதமாக கருதப்பட்டு வருகிறது. அதோடு தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் முன்னோர்களால் கூறப்படுவது உண்டு. தை மாத பிறப்பை பொங்கல் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க தைப்பொங்கல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
இதனையொட்டி கடந்த சில நாட்களாக நாகை கடை வீதிகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வந்தது.
இதே போல நேற்றும் கூட்டம் அலைமோதியது. கரும்பு, மண் பானை, மண் அடுப்பு, மஞ்சள் கொத்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். மேலும் சீர்வரிசை வைப்பதற்காக சரக்கு ஆட்டோகளில் வந்தவர்கள் கட்டு, கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனர்.
இதுதவிர நாகை நீலா வீதிகள், பழைய, புதிய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கரும்புக் கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகைக்காக தற்காலிக தரை கடைகளும் ஆங்காங்கே உதயமாகியிருந்தன. மேலும் மண் பானை, அடுப்பு, கோலப்பொடி உள்ளிட்டவைகளை சாலையோரத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
பாரம்பரிய உடைகள்
ஜவுளி கடைகளிலும் புத்தாடை வாங்குவதற்காக வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து ஜவுளி கடைகளிலும் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
குறிப்பாக கல்லூரியில் நடக்கும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணவ- மாணவிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் வேட்டி, சேலை விற்பனை படுஜோராக நடந்தது.
சமத்துவ பொங்கல்
பள்ளி, கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலையுடன் வந்து, பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். பிரபல கல்லூரிகளில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் களைகட்டியது.பொங்கல் பண்ைடிகைக்காக, சொந்த ஊருக்கு செல்பவர்களின் கூட்டம் நாகை ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரெயில்களில் பயணிகள் முண்டிஅடித்துக் கொண்டு ஏறி சென்றனர். முக்கியமான பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.