பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.

Update: 2022-08-30 14:45 GMT

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது.

இதனால் இளைஞர்கள் தாரை- தப்பட்டை அடித்தபடி சுமார் 3 அடி முதல் 10 அடி வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக திருவண்ணாமலையில் அவல், பொரி, பழ வகைகள், சோளம், பூக்கள், பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காக திருவூடல் தெரு, தேரடி வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் திரண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டன.

இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வாங்கி சென்றனர்.

மேலும் விநாயகர் சிலைகளை அலங்கரிப்பதற்காக சிறிய வண்ண அலங்கார குடைகளும் விற்பனை செய்யப்பட்டது. அதையும் மக்கள் வாங்கி சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்