தொடர் விடுமுறை காரணமாக தஞ்சை பெரியகோவிலில் குவிந்த மக்கள் கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.
தஞ்சை பெரியகோவில்
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டு இருக்கிறது. தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், நடராஜர், சண்டீகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி என பல்வேறு சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து சென்றனர். கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் பலர் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தொடர் விடுமுறை
தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று வந்தனர். இதனால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இவர்கள் கார்கள், வேன்கள், பஸ்களில் வந்ததால் பெரியகோவில் முன்புள்ள வாகன நிறுத்தும் இடம் நிரம்பியது.
வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பெரியகோவிலுக்கு சாலையை கடந்து மக்கள் சென்றதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பெரியகோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். மேலும் கோவிலின் கட்டிடக்கலைகளையும், சிற்பக்கலைகளையும் பார்த்து மெய்சிலிர்த்தனர்.