கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-10-16 18:45 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, சொத்திகுப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருவார்கள்.

தற்போது புரட்டாசி மாத சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் கடலூர் துறைமுகத்தில் குவிந்தனர். அவர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் கடலூர் துறைமுக பகுதி நேற்று பரபரப்புடன் செயல்பட்டதை காண முடிந்தது.

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடலின் நீரோட்டம் மாற்றம் காரணமாக மீன்களின் வரத்து தற்போது குறைவாக உள்ளது. அதே நேரத்தில், பொதுமக்கள் அதிக அளவு மீன் வாங்க வந்ததால், மீன் விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது.

ஒரு கிலோ சங்கரா, பாறை, வகை மீன்கள் ரூ.400 முதல் 500 வரையும், இறால் வகை மீன் ரூ.300 முதல் ரூ.500 வரையும், வஞ்சிரம் வகை மீன்கள் ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்