ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இ-சேவை மையங்களில் குவியும் மக்கள்; சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை
கம்பத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே எமிஸ் ஐ.டி.யை பராமரிக்க அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த எமிஸ் ஐ.டி.யில் மாணவ-மாணவிகளின் ஆதார் அட்டை எண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஐ.டி.யில் உள்ள விவரங்கள் சான்றிதழில் அச்சிடப்படும் என்பதால், ஆதார் அட்டையில் உள்ள பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் பெயர்களில் உள்ள திருத்தங்களை சரி செய்வதற்காக கம்பம் பகுதியில் உள்ள தபால் நிலையங்கள், நகராட்சியில் உள்ள இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் காலை 8 மணியில் இருந்தே வரிசையில் காத்திருக்கின்றனர். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், கடந்த ஆண்டு வரை தனியார் இ-சேவை மையங்கள், வங்கிகளில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான சேவை தனியார் இ-சேவை மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தபால் நிலையம் மற்றும் நகராட்சியில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து திருத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 40 நபருக்கு மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றனர்.