குப்பை மேடாக காட்சியளிக்கும் சீலாவரி ஏரி-தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேலம் மாநகராட்சி 10-வது வார்டில் குப்பை மேடாக காட்சியளிக்கும் சீலாவரி ஏரி தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
10-வது வார்டு
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட 10-வது வார்டில் சுமார் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 11 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதர நிலையம், ரேஷன் கடை ஆகியவை உள்ளன. இங்கு கைத்தறி நெசவாளர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த வார்டை பொருத்தவரை வீதிகள் தோறும் சென்று குப்பைகள் தினமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. போதிய அளவுக்கு தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை அமைக்கப்பட்டு உள்ளன. புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இந்த வார்டை தவிர மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சீலாவரி ஏரி
புத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்தில் தேங்கும் கழிவுகளை 3 நாட்களுக்கு ஒருமுறை அதே பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை வண்டிகள் மூலம் அள்ளி வெளியே சென்று கொட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த வார்டில் தான் சீலாவரி ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பை மேடாகவும் காட்சியளிக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஏரிக்கு தான் வருகிறது. இதனால் ஏரியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. ஏரிக்குள் பாழடைந்த நிலையில் கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியை விரைவில் தூர்வார வேண்டும் என்றும், அதையொட்டி உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 10-வது வார்டில் உள்ள நிலவும் பிரச்சினை குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
சாலை வசதி
செங்கலணை பகுதியை சேர்ந்த ரவி:-
புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து செங்கலணை செல்லும் மெயின் ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை சரி செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதுடன், பொது சுகாதார வளாக கழிவுகளை சாக்கடை கால்வாயில் வெளியேற்றாமல் வண்டிகள் மூலம் எடுத்து வெளியே சென்று கொட்ட வேண்டும்.
குமரன் நகர் பகுதியை சேர்ந்த ருக்குமணி:-
எங்கள் பகுதிக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை மோசமாக காணப்படுகின்றது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதியும் சரியாக இல்லை. எனவே விரைவில் சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை அமைக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
சக்திநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம்:-
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அடைக்கப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள்ம் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சீலாவரி ஏரி தூர்வாரப்படுவதுடன் அதையொட்டி உள்ள சாலையை சீரமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு பெரிதும் வாய்ப்புள்ளது..
குடிநீர் தொட்டி
அண்ணாநகரை சேர்ந்த ஜீவா:-
எங்கள் பகுதியில் சாலை அமைக்கும் போது ரோட்டில் இருந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு தெருவுக்குள் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. தற்போது தண்ணீர் பிரச்சினை இல்லை என்றாலும் வெயில் காலம் வரும் போது பொதுமக்களுக்கு தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும். எனவே அதற்குள் இந்த தண்ணீர் தொட்டியை மீண்டும் அதே இடத்தில் வைத்து பழுதை நீக்கி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வார்டு மக்களுக்கு வேண்டிவை
* சீலாவரி ஏரியை தூர்வாருவதுடன், அதையொட்டி உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்
* சாலை வசதி மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
* பொதுசுகாதார வளாக கழுவுநீரை வண்டிகள் மூலம் அள்ளி வெளியே கொண்டு செல்ல வேண்டும்
* பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சரி செய்ய வேண்டும்
என்ன சொல்கிறார் கவுன்சிலர்
10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆர்.சாந்தி கூறியதாவது:-
இந்த வார்டை பொறுத்தவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் கைத்தறி தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வார்டில் தூய்மை பணிக்கு அதிகளவு முக்கியவத்தும் கொடுக்கப்பட்டு தினமும் குப்பைகளை அள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணாநகர் மெயின்ரொடு, தாண்டவன் நகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் ரூ.3 கோடி மதிப்பில் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதவிர வடக்கு சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ஸ்ரீராம் நகரில் இருப்புறங்களிலும் ரூ.16 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி வாரியாக முதல்-அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் சீலாவரி ஏரியை தூர்வார வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஏரியை தூர்வாரப்படுவதுடன் அதையொட்டி உள்ள சாலையையும் சீரமைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சாலை வசதி இல்லாத இடங்களிலும் விரைவில் சாலை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.