தடுப்பணைகள் கட்டி தண்ணீர் சேமிக்கப்படுமா?
பேராவூரணி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் இருப்பதால் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பேராவூரணி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் இருப்பதால் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீர்மட்டம் குறைந்தது
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பேராவூரணி பகுதியில் உள்ள குளங்களில் நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகளாக காட்சி அளிக்கிறது. முன்பெல்லாம் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் தான் அதிகம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
ஆனால் தற்போது சித்திரைக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
பேராவூரணி பெரிய குளம்
பேராவூரணி கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் குளிர்பான கடைகளில் தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர். வெயிலின் அளவு கூடுதலாக இருப்பதால் தர்பூசணி, இளநீர், வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் வெள்ளரிப் பிஞ்சுகள் வியாபாரமும் மும்முரமாக நடைபெறுகிறது.
பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டும், நீர்மட்டம் குறைந்தும் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடைமடை பகுதி விவசாய சங்கம் அமைப்பு பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரியது.
குடிநீர் தட்டுப்பாடு
மேலும் குளத்தில் குறுங்காடுகள் அமைத்து தண்ணீர் சேமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக பேராவூரணி பகுதிக்கு பெரும் நீர் ஆதாரமாக பெரியகுளம் விளங்கிவருகிறது. கோடை காலங்களில் பேராவூரணி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பெரும் உதவியாக பெரியகுளம் இருக்கின்றது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் முன்பு நிரம்பி வழிந்த குளத்தில் தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டது.
இந்த குளத்தின் மூலம் பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வந்தனர். தற்போது நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் தெரிவதால் இந்த பெரிய குளத்தின் மூலம் இருந்து விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிப்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் அத்தியாவசிய தேவைக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
தடுப்பணை
எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான முன்னேற்பாடுகளை எடுத்து பொது மக்களிடம் நீர் மேலாண்மை திட்டத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலங்களில் உபரியாக வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீர் காட்டாறுகளில் கலந்து வீணாக கடலுக்கு செல்வதை தடுத்து, பூலோக அடிப்படையில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் தடுப்பணைகளை அமைத்து, தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வெயில் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.