காயங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு

தரங்கம்பாடி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடலில் காயங்களுடன் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

Update: 2023-08-14 19:15 GMT

மயிலாடுதுறை;

தரங்கம்பாடி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடலில் காயங்களுடன் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

தீ விபத்து

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகா மடப்புரம் கிராமத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு கலைவாணன் என்பவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் ஓடிசென்றனர். அப்போது வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.இதில் கருணாநிதி, மணிமாறன், ஜெயக்குமார், ஜெயப்பிரதாப், சுரேஷ், ராஜேஷ், வினோத், சரவணன், இளையபெருமாள், ஜெகதீசன், மதன், நடராஜன், சுரேஷ், கலியபெருமாள் உட்பட 15 பேர் காயமடைந்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

காயங்களுடன் வந்தனர்

விவசாய வேலை மற்றும் கட்டுமான வேலைகளுக்கு செல்லக்கூடிய 15 பேரும் தீக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றாலும் இன்னும் தீக்காயங்கள் முழுமையாக குணமடையவில்லை. இதனால் இவர்கள் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் வருமானம் இல்லாமல் தங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்துக்குள்ளானதால் தீக்காயமடைந்தவர்கள் காயங்களுடன் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் மகாபாரதியை நேரில் சந்தித்து தங்கள் குடும்பங்களை காப்பாற்ற நிவாரண உதவி கேட்டு மனு அளித்தனர். தீக்காயங்களுடன் 10-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்