வாயில் கருப்புத்துணி கட்டி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்

சமூகவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புத்துணி கட்டி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-26 19:38 GMT

சமூகவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புத்துணி கட்டி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி திருவானைக்காவல் மேலக்கொண்டையம் பேட்டையை சேர்ந்த ஊர் பொதுமக்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், திருவானைக்காவல் மேலக்கொண்டையம்பேட்டை பகுதியில் ஒரு சிலர் கும்பலாக சேர்ந்து கொண்டு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தட்டி கேட்பவர்களை ஆயுதங்களால் தாக்கி அவர்களுடைய வாகனங்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஆகவே இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

சஞ்சீவிநகரில் பாதாள சாக்கடை

கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் சரவணத்தேவர் தலைமையில் அளித்த மனுவில், தென் மாவட்டங்களில் அனைத்து மக்களும் சாதி கலவரங்களை மறந்து சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இயக்குனர் மாரிசெல்வராஜ் அவரது திரைப்படம் மூலம் மீண்டும் சாதிமோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி வருகிறார். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவரது திரைப்படம் திரையிடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

பா.ஜனதா மலைக்கோட்டை மண்டல் துணைத்தலைவர் ராமநாதன் தலைமையில் அளித்த மனுவில், திருச்சி சஞ்சீவிநகர் 15-வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அங்குள்ள தண்ணீர்தொட்டியை பராமரிக்காததால் தண்ணீர் மஞ்சள்நிறமாக வருகிறது. இதை சரி செய்ய வேண்டும். சஞ்சீவிநகரில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். அந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கூறி இருந்தனர்.

லாட்டரி விற்பனை

சோமரசம்பேட்டையை சேர்ந்த ஸ்ரீராமஜெயம் சிலம்பாட்டக்குழு சார்பில் ராமர் என்பவர் சிலம்ப மாணவிகளுடன் அளித்த மனுவில், நான் 12 வருடங்களாக இலவச சிலம்ப பயிற்சி நடத்தி வருகிறேன். 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். எல்லோரும் ஏழை மாணவர்கள் என்பதால் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு நிரந்தரமாக ஒரு இடமும், மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் திலீப்குமார் தலைமையில் அளித்த மனுவில், காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செல்போன் மூலமும், நம்பர் மெசேஜ் மூலமும் காந்திமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படுஜோராக நடக்கிறது. ஆகவே இதனை தடுத்து நிறுத்தி கூலித்தொழிலாளர்களையும், மாணவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

குறைதீர்க்கும் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 550 மனுக்கள் பெறப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்