கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-01 18:52 GMT

பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தனித்தீவு போல் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் அறவே இல்லை என்று கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வைரம்பட்டி, விடத்தலாம்பட்டி, ஆர்.பாலக்குறிச்சி, கோபால்பட்டி, ரெகுநாதபட்டி, சீகம்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், தங்களது வாழ்வாதாரம் முடங்கும் வகையில் எம்.பி., எம்.எல்.ஏ. ஓட்டு மற்றும் போலீஸ் நிலையம் சிவகங்கைக்கும், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவை புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இருப்பதால் மக்கள் எந்த விதமான திட்டங்களும் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.பாலக்குறிச்சியிலிருந்து பொன்னமராவதி மற்றும் புழுதிப்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை, ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து அங்குவந்த உலகம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் 3 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் சாலை மறியல் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்