குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-07-05 17:16 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி பகுதியில் சமீப நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று கள்ளிக்குடி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், எடையூர் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் இணைப்பு வழங்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்