குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-24 18:45 GMT

திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள இந்திரா நகர், காமராஜர் சாலை பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இங்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள சாலையில் அவர்கள் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை தவிர்த்து சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எங்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். குடிநீர் குழாய் அமைத்தும் தண்ணீர் வினிியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்