ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் பெரிய ஏரிநீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமித்து கடச்டப்பட்ட வீடுகள், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் பெரிய ஏரிநீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமித்து கடச்டப்பட்ட வீடுகள், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பத்தூர் டவுன் அருகே உள்ள பெரிய ஏரிக்கு சொந்தமான நீர்நிலை பகுதிகளில் பலர் வீடு, கடைகளை கட்டி உள்ளனர். 84 கடைகள், 612 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீர்வளத்துறை சார்பில் கடைகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதியில் நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேனர்கள் வைத்து, நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
அதில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் நீர்வளத் துறை சார்பில் ஆக்கிரமிக்களை அகற்றி அதற்குண்டான கட்டணம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு கெடு முடிந்ததால் நேற்று காலை 7 மணிக்கு நீர்வளத்துறை, வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளை இடிக்கும் பணிகளை தொடங்கினர்.
சாலை மறியல்
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூர்- வேலூர் சாலையில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சாலை மறியலை கைவிட மறுத்து அங்கேயே அமர்ந்திருந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டிடி.குமார், நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் சதீஷ், கவிதா, சரவணன், டி.டி.சி. சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு நேரில் சென்று மறியல் செய்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக, கூறியதால் மேலும் சாலை மறியலில் கூட்டம் அதிகரித்தது. இதனால் திருப்பத்தூர்- வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கால அவகாசம்
தொடர்ந்து போலீசார் சமரச பேச்சில் ஈடுபட்டபோது கலெக்டர் நேரில் வந்த ஆக்கிரமிப்பு பகுதி வீடுகளை அகற்றமாட்டோம் என தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் நீர்வளத்துறை பொறியாளர்கள் குமார், பாலாஜி, உதவி பொறியாளர் சக்தி ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வீடுகளை அகற்ற காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம்காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.