மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நெமிலி அருகே வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-22 18:17 GMT

நெமிலி அருகே வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மழைநீர் சூழ்ந்தது

நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலப்புலம் ஊராட்சியில் ராமாபுரம் சமத்துவபுரம் உள்ளது. இதன் அருகே கசக்கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் ஓச்சேரி பகுதியில் இருந்து பனப்பாக்கம் எல்லையம்மன் கோவில் வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் மேலப்புலம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வடியும் மழைநீர், சமத்துவபுரம் வழியாக சென்றுள்ளது.

தற்போது இந்த கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர், வெளியேற வழியில்லாமல் ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இங்குள்ள வீடுகளையும் கடந்த 20 நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளது.

சாலை மறியல்

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேல், துணை தலைவர் தீனதயாளன், நெமிலி தாசில்தார் சுமதி, காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மழைநீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசக்கால்வாய் வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் அளவீடு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

முகாம்களில் தங்கவைப்பு

இதனையடுத்து மழைநீர் தேங்கியுள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ளவர்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்தனர். அப்போது நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்