குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அருகே குடிநீர்வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-19 18:46 GMT

திருச்சி அருகே குடிநீர்வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 மாதங்களாக...

திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை ஊராட்சி தெற்கு தெரு, வடக்கு தெரு, முஸ்லிம் தெரு, ரோஷன் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே கூடினர். பின்னர் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜெரால்டு மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவகுமார், ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நடந்து சென்ற மாணவர்கள்

இந்த சம்பவத்தால் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து பள்ளிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்