கண்டமங்கலம் அருகேகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கண்டமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-03 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலைகுப்பம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிதாக பைப்லைன் பதிக்கும் பணிகள் கடந்த 3 வாரங்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் பைப்லைன் பதிக்காமலும், பள்ளத்தை மூடாமலும் இருந்து வருவதோடு டேங்கர் லாரிகள் மூலமும் சரிவர குடிநீர் வினியோகிப்பதில்லை என புகார் எழுந்தது. இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்ட பொதுமக்கள் இதுபற்றி, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டனர். இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், நேற்று காலை 11.15 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், காலை 11.30 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்