குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

குடியாத்தத்தில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-13 12:10 GMT

குடியாத்தத்தில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் குழாய்கள் துண்டிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை நேருஜி நகர் பகுதியில் ஒருபகுதி குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கும், ஒருபகுதி குடியாத்தம் நகராட்சி 15-வது வார்டுக்கும் சேருகிறது. இப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் இருந்து தனித்தனியாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் செதுக்கரை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் அகலப்படுத்தி கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது நேருஜி நகர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

உடனடியாக குடிநீர் கிடைக்க வேண்டியும், துண்டிக்கப்பட்ட குழாய்களை உடனடியாக இணைக்க வலியுறுத்தியும் பெண்கள் காலி குடங்களுடன் குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் செதுக்கரை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற உறுப்பினர்கள் கே.விஜயன், என்.கோவிந்தராஜ், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் உள்ளிட்டோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது துண்டிக்கப்பட்ட குழாய்கள் சீர் செய்து குடிநீர் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்