காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-08-22 17:09 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஊமை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரனுக்கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பாண்டியன் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி தலைவர் தரப்பின் சார்பில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் அடித்தனர். இதனால் அங்கு மோதல் சம்பவம் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தாசில்தார் வேணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தரப்பினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருவரும் ஒற்றுமையாக இருந்து கும்பாபிஷேகத்தை கிராம மக்களின் பங்களிப்புடன் நடத்த வேண்டும். இதை மீறி யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த தகவல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்