அந்நிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தில் நிலம் ஜப்தி வேறு வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தாசில்தார் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்
அந்நிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தில் நிலம் ஜப்தி செய்ய வேறு வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தாசில்தார் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் மதுரை தெருவில் வசித்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மீது 1990-ம் ஆண்டு அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டம் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான சுமார் 1,426 சதுர அடி நிலத்தை ஜப்தி செய்யும் உத்தரவுடன் வந்தார். அவருக்கு நிலத்தை பறிமுதல் செய்ய ஆலந்தூர் தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் சரன் சந்தியா, உதவி சர்வேயர் ஜெயந்தி மற்றும் போலீசார் உடன் வந்தனர்.
பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான இடத்தை வேறு நபர்களுக்கு விற்று தலைமறைவான நிலையில் அதிகாரிகள் அருகில் இருந்த ஜாகிர் என்பவரது வீட்டில் தவறுதலாக நோட்டீஸ் ஒட்டி, அந்த வீட்டில் இருந்தவர்களை வெளியேற சொன்னதும் அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர்.
பறிமுதல் செய்ய வேண்டிய இடத்தை விட்டு வேறு இடத்தில் நோட்டீஸ் ஒட்டுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும் வாகனத்தை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து உத்தரவை தாருங்கள் என கேட்டனர். பின்னர் தங்கள் ஆவணங்களை காட்டி எங்கள் வீட்டை எப்படி பறிமுதல் செய்ய முடியும் என வாக்குவாதம் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது, இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் மேரி ஆகியோர் வந்தனர். பின்னர் உரிய ஆவணங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாகீர் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசை அதிகாரிகள் அகற்றினார்கள்.
வீட்டின் ஆவணங்களை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என நில உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் வாகனம் செல்ல அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.