மாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் மாற்று இடம் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-11 18:45 GMT

விருத்தாசலம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு

விருத்தாசலம் அருகே கார்குடல் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை தெருவில் சுமார் 73 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை சார்பில் கார்குடல் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எச்சரிக்கை நோட்டீஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை சார்பில் அனைத்து வீடுகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறி இருந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, அதன் பிறகு தான் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

பரபரப்பு

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக, சப்-கலெக்டர் பழனியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் பழனி, கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து அவர்களிடமும் மனு அளித்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்