வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-10-28 19:14 GMT

வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வீடுகள் இடிப்பு

வாணியம்பாடி நூருல்லாபேட்டை மற்றும் கோவிந்தபுரம் பகுதியில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி கட்டிடம் உள்பட 48 வீடுகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. வீடுகள் இழந்த பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்று இடமோ அல்லது நேதாஜிநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளோ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வீடுகள் இழந்த பொதுமக்கள் அனைவரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர், பொது மக்களை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால், அப்பகுதியினர் சாலையோரம் மற்றும் மேம்பாலத்தின் கீழே தங்கி வந்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் அவர்கள் நேற்று உணவிற்கும், தங்குவதற்கும் இடமில்லாத காரணத்தினால் கைக்குழந்தைகள், முதியவர்கள், இளம் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை வைத்துக்கொண்டு மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும், எனவே மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிகமாக தங்குவதற்கு இடவசதி செய்து தர வேண்டும் என்று கூறி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும், கோரிக்கை மனுவின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்