பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆனைமலையில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-23 00:30 GMT

ஆனைமலை

ஆனைமலையில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்ருத் 2.0 குடிநீர் திட்டம்

கோவை மாவட்டம் ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆனைமலை ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பேரூராட்சி பகுதியில் குடியிருப்புகளில் 3,700 குடிநீர் குழாய்களும், பொதுகுடிநீர் குழாய்கள் 250-ம் உள்ளன. தற்போது ஒரு சில வார்டுகளில் சரியாக குடிநீர் கிடைக்காத சூழல் உள்ளது.

இந்த நிலையில் ஆனைமலை பேரூராட்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசின் அம்ருத் 2.0 என்ற குடிநீர் திட்டம் வந்துள்ளது. இதற்காக மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதம் பேரூராட்சியில் இருந்து 20 சதவீதம் என ரூ.18 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

இந்த திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு அதில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என அளவீடு செய்ய மீட்டர் வைக்கப்படும். இதன் மூலம் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு தடுக்கப்படும், ஒரு இணைப்பு பெற்றுவிட்டு, அதனை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பயன்படுத்தும் குடிநீருக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஆனைமலை பேரூராட்சி அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் அம்ருத் 2.0 திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏறப்பட்டது. இதுகுறித்்து தகவல் அறிந்து வந்த ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மக்கள் பாதிக்கப்படுவார்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அம்ருத் 2.0 குடிநீர் திட்டம் பெருநகரங்களுக்கும், நகராட்சிகளுக்கும், போதிய குடிநீர் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் கிடைக்கக்கூடிய திட்டம். ஆனால் ஆனைமலை பேரூராட்சியில் வற்றாத ஜீவநதியாக ஆழியாறு ஓடுகிறது. ஆனைமலை பேரூராட்சிக்கு இந்த திட்டம் தேவையற்றது. மேலும் இத்திட்டத்தால் ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுக்குழாய்கள் துண்டிக்கப்படும். மேலும் தினசரி குறிப்பிட்ட லிட்டர் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும். அதிகளவு தண்ணீர் பயன்படுத்தினால் அதற்கு மீட்டர் வைத்து பணம் வசூலிக்கப்படும். இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனிடம் கொடுத்தனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

ஆனைமலை பேரூராட்சி தலைவர் கூறுகையில்:-

பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் மட்டுமே எந்த ஒரு திட்டமும் அமல்படுத்தப்படும். மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தில் பொதுக்குழாய்கள் துண்டிக்கப்படாது. இந்த திட்டத்தால் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். மத்திய, மாநில அரசின் அம்ருத் 2.0 திட்டத்தை பற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விழிப்புணர்வுடன் எடுத்துக் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்