கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருமயம் அருகே மெய்யப்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், கட்டிடங்கள் சேதமடைந்து வருவதாகவும், அந்த குவாரியின் அனுமதியை ரத்து செய்ய கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று தனியார் ஓட்டலில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்திய இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர். கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்து மூட நடவடிக்கை எடுக்க கோரினர். மனுவை பெற்ற குழுவினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின் வெளியே வந்த மக்கள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும் பெண்கள் ஆவேசமாக தங்கள் பகுதியின் பாதிப்புகள் குறித்து கூறினர். அவர் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.