ஜவுளி வியாபாரியை தாக்கிய டெல்லி போலீசாரை பொதுமக்கள் முற்றுகை
விழுப்புரத்தில் விசாரணைக்கு வந்த இடத்தில் ஜவுளி வியாபாரியை தாக்கிய டெல்லி போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). ஜவுளி வியாபாரியான இவர் சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மூலமாக டெல்லியில் வியாபாரி ஒருவரிடம் இருந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து விழுப்புரத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லி வியாபாரியிடம் செந்தில்குமார் தான் வாங்கிய துணிகளுக்குரிய பணத்தை செலுத்தவில்லை.
டெல்லி போலீசில் புகார்
இதையடுத்து டெல்லி வியாபாரி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து செந்தில்குமாரை கைது செய்வதற்காக டெல்லி போலீசார், சம்பந்தப்பட்ட புகார்தாரருடன் சென்னை ஜெயப்பிரகாசையும் அழைத்துக் கொண்டு விழுப்புரம் வந்து செந்தில்குமாரிடம் விசாரணை செய்தனர். அப்போது டெல்லி வியாபாரிக்கும், செந்தில் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது முற்றி ஒருகட்டத்தில் செந்தில்குமாரை அவர் தாக்கியுள்ளார். மேலும் டெல்லி போலீசாரும் செந்தில்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இதில் நெஞ்சு வலி ஏற்பட்டதில் செந்தில்குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே செந்தில்குமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு டெல்லி போலீசாரை முற்றுகையிட்டு, உள்ளூர் போலீசாரின் அனுமதி பெறாமல் இங்கு வந்து செந்தில்குமாரை எப்படி கைது செய்ய முற்படலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். .
பேச்சுவார்த்தை
இதை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டெல்லி போலீசாரிடமும் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு டெல்லி போலீசார், செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.