5-வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி

கொள்ளிடம் பகுதியில் 5-வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-11-16 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் 5-வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

கொள்ளிடம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. தற்போது மழை நின்று விட்டதால் தேங்கிய தண்ணீர் வடிய தொடங்கி வருகிறது. ஆனால் கொள்ளிடம் கிழக்கு பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது.கோடங்குடி, வடகால், கடவாசல், உமையாள்பதி, அகரவட்டாரம், வேட்டங்குடி, குமரக்கோட்டகம், இருவக்கொள்ளை, எடமணல், உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மின்வினியோகம்

கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் சேதம் அடைந்த மின்கம்பங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.வேட்டங்குடி, ஆலங்காடு, கிராமத்தில் தொடர்ந்து முகாம் அமைக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் வழங்கப்படும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா? என்பதை குறித்து ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கூறுகையில், முகாம்களில் தண்ணீர் வடியும் வரை அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் முகாம்களில் தினமும் வெவ்வேறு உணவுகள் வழங்க வேண்டும்.முகாம்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட கிராம சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும். மழையினால் வீடுகள் இடிந்து உடமைகளை இழந்த குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்