2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் ஆர்வம் காட்டவில்லை

செப்டம்பர் வரை கால அவகாசம் இருப்பதால் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முதல் நாளில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.;

Update:2023-05-24 00:34 IST

பண மதிப்பிழப்பு

இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்பை 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் செல்லாமல் போய் வெற்றுத்தாள்கள் ஆகிவிட்டன.

கருப்பு பணம், பண பதுக்கல், பயங்கரவாதத்திற்கு பணம் அனுப்புதல் போன்ற குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை மக்கள் ஏ.டி.எம். மையங்களில் காத்திருந்து எடுத்துச்சென்று பயன்படுத்தினர்.

திடீர் அறிவிப்பு

ஒரு கட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. நடுத்தரம் மற்றும் அதற்கு கீழ் உள்ள மக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கண்ணில் பார்க்கவே முடியாத அளவுக்கு அதன் புழக்கம் மிகவும் குறைந்து கொண்டே போனது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஒரு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந்தேதி வெளியிட்டது. அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப்பெற இருப்பதாக கூறப்பட்டது.

அதிகபட்சம் ரூ.20 ஆயிரம்

ஏற்கனவே பல மாதங்களாக கண்ணில் காணாமல் மாயமாகியிருந்த அந்த பணத்தை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் என்ற அறிவிப்பு, சாதாரண மக்களிடையே எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் 23-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து வங்கிகளிலும் அந்த நோட்டுகளை கொடுத்து அவற்றிற்கு பதிலாக மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது.

தனி ஏற்பாடுகள்

அதன் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் தனி வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. வங்கிகளின் வெளியே இதுதொடர்பான நோட்டீசுகள் ஒட்டப்பட்டு இருந்தன.

சில வங்கிகளில் தனியாக ஒரு கவுண்ட்டர் அமைத்து தனி அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு வங்கிகளிலும் பணம் கையிருப்பில் வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேவையான அளவுக்கு ரூ.500, ரூ.200 நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

ரிசர்வ் வங்கி உத்தரவிட்டபடி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உடனடியாக பணம் மாற்றி கொடுக்கப்பட்டது.

அடையாள அட்டை

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வேறு நோட்டு பெறுகிறவர், அந்த வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், அவரிடம் எந்த அடையாள அட்டையும் பெறாமல் பணத்தை வங்கி ஊழியர்கள் மாற்றிக்கொடுத்தனர். அவர்கள் தங்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

ஆனால் மற்றவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, அடையாள அட்டையின் நகலும் கேட்கப்பட்டது. பணம் மாற்றிக்கொள்ளும் கவுண்ட்டரில் உள்ள அலுவலரிடம் அசல் அடையாள அட்டை காட்டப்பட வேண்டும். 6 விதமான அடையாள அட்டைகளான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மக்கள்தொகை பதிவேடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டும்படி விண்ணப்பத்தில் கூறப்பட்டு உள்ளது.

அடையாள அட்டையின் எண், தனியாக விண்ணப்பத்தில் எழுதப்பட வேண்டும். மாற்றப்பட வேண்டிய ரூபாய் நோட்டின் விவரங்கள், அதன் மொத்த மதிப்பு ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும் என்று விண்ணப்பத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஏன் கூட்டம் இல்லை?

ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் நாளாகிய நேற்று, வெகுசிலரே அதனை மாற்ற வந்திருந்தனர். எதிர்பார்த்த அளவில் கூட்டம் இருக்கவில்லை. இதுகுறித்து கரூரில் உள்ள ஒரு வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- எங்கள் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். மேலும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், கடை உரிமையாளர்கள், டெக்ஸ்டைல் உரிமையாளர்கள், பஸ் கூடு கட்டும் தொழில் சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களும் கணக்கு வைத்துள்ளனர். இருப்பினும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிலர் மட்டுமே வந்து மாற்றி சென்றனர். மேலும் ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர். சாதாரண மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக எங்களது வங்கிக்கு அதிக அளவில் வரவில்லை. இதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாததே காரணம். வங்கியில் எப்போதும் போல் கூட்டம் காணப்பட்டதே தவிர வழக்கத்திற்கு அதிகமான கூட்டமோ, கூட்ட நெரிசலோ ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்