ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பொதுமக்கள்குளித்து மகிழ்ச்சி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-06-11 18:36 GMT

தேங்கி நிற்கும் தண்ணீர்

கரூர் அருகே ஆண்டாங்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் மழை காலம் மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் நேரங்களில் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த தண்ணீர் கரூர் பகுதி மக்களின் விவசாய தேவைகள் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மழை இல்லாததாலும், அமராவதி ஆற்றில் நீர் திறப்பு இல்லாததாலும் தடுப்பணை வறண்ட நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது பெய்த சிறு மழையின் காரணமாக, ஆற்றில் வந்த தண்ணீர் இந்த தடுப்பணையில் தேங்கி உள்ளது.

மீன்பிடித்து மகிழ்ச்சி

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் குளித்தும், மீன்களை தூண்டில் மூலம் பிடித்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் பிடிக்கும் மீன்களை தங்களின் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதுடன், எஞ்சியுள்ள மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறுகையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் தடுப்பணையில் குளித்தும், மீன்களை தூண்டில் மூலம் பிடித்தும் பொழுதை கழித்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்