பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? - பொதுமக்கள் கருத்து

Update: 2023-02-14 18:45 GMT

2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழ போரில் கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர் இறந்து கிடக்கும் படங்களும் வெளியானது. ஆனாலும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில தலைவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டே வந்தனர்.

பழ.நெடுமாறன் பரபரப்பு கருத்து

இந்தநிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ''பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களின் அனுமதியின் பேரில்தான் இந்தக் கருத்தை சொல்கிறேன். உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார்'' என தெரிவித்தார்.

அவரது இந்த கருத்தை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்த மாறுபட்ட கருத்துகள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. பழ.நெடுமாறனின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்கள். அதேபோல மக்களும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

ஈழ தமிழர்களுக்கு பாதிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சச்சிதானந்தம்:-

லெனின் போன்ற தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது ரகசியம் காக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மக்கள் முன் தோன்றினர். ஆனால் பிரபாகரன் விஷயத்தில் தொடர்ந்து பழ.நெடுமாறன் ஒரு கருத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தாகும். பிரபாகரன் உயிருடன் வருவது மகிழ்ச்சிதான். என்றாலும், இந்த சூழலில் பழ.நெடுமாறன் இந்த கருத்தை தெரிவித்தது ஏன்? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நம்ப தயக்கமாக உள்ளது

மாரண்டஅள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரம்:-

பழ.நெடுமாறன் நேர்மையான மனிதர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள தகவல் என்னை போன்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை ராணுவம் இந்த தகவலை முழுமையாக மறுக்கிறது. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் 13 ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ முடியும் என்பதை நம்ப முடியவில்லை. இதன் காரணமாகவே இந்த கருத்தை நம்புவதற்கு தயக்கமாக இருக்கிறது. எந்த கோணத்தில் இந்த கருத்தை பழ.நெடுமாறன் கூறுகிறார் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சந்தேகங்கள் எழுகிறது

அரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ்:-

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள தகவல் நம்பும்படியாக இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. எனவே இது தவறான கருத்தாக இருக்க வாய்ப்பு அதிகம். சர்வதேச அளவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை வருகிற 2024-ம் ஆண்டு நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியிடப்படுவது சர்வதேச அளவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பு செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. அவர் வெளியிட்டுள்ள தகவல் காரணமாக பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

புறக்கணிக்க முடியவில்லை

தர்மபுரியை சேர்ந்த தமிழ் தேசிய சிந்தனையாளர் நேதாஜி:-

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானபோதே, அதை பலர் மறுத்து இருக்கிறார்கள். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகின்றன. இப்போது பழ.நெடுமாறன் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவலை முழுமையாக புறக்கணிக்க முடியவில்லை. இது குறித்து தெளிவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டால் மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்படும். பிரபாகரன் உயிருடன் இருந்தால் அதை அவரே வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இது தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆணித்தரமான ஆதாரம்

தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ்குமார்:-

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு செல்லக்கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருந்தவர். எனவே அவர் உயிருடன் இருக்கிறார், மக்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல் 13 ஆண்டுகளாக மறைவிடத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற கருத்து நம்புவதற்கு கடினமாக உள்ளது. இத்தகைய கருத்து இப்போது ஏன்? வெளியிடப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களின் சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறுபவர்கள் அதற்கான ஆணித்தரமான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அந்த கருத்து உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு பொதுமக்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்