வக்கீலிடம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்
நெல்லை ரெயில் நிலையத்தில் வக்கீலிடம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மேகலிங்கபுரம் சாலைத்தெருவை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன் (வயது 35). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி தனது குடும்பத்தினரை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வழி அனுப்புவதற்கு காரில் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது கிருஷ்ணனிடம், கார் பார்க்கிங் கட்டணம் ரூ.20-ஐ ஒப்பந்ததாரர் வசூலித்து உள்ளார். ஆனால் கிருஷ்ணன் காரை பார்க்கிங் செய்யவில்லை, குடுப்பத்தினரை வழியனுப்ப மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஒப்பந்ததாரர் அவரிடம் கட்டணம் வசூலித்து இருக்கிறார். இதுகுறித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மனஉளச்சலுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.2 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.17 ஆயிரத்தை ஒப்பந்ததாரர் வழங்க உத்தரவிட்டுள்ளது.