தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

நீலகிரிக்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-07-16 18:45 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும், சோதனை நடத்திய வருவாய் துறை அதிகாரிகளையும் படத்தில் காணலாம். 

குன்னூர்: நீலகிரிக்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

மலை மாவட்டமான நீலகிரியில் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அதனை சாலையோரம், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அந்த வகையிலான பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் துறை சார்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மாவட்ட சோதனை சாவடிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகிறார்களா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம்

அப்போது நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள், உணவு தட்டுகள் கொண்டு வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள், சுற்றுலா பயணிகளிடம் நீலகிரிக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்