குமரியில் ஓடும் ஸ்கூட்டருக்கு அபராதம்
குமரியில் ஓடும் ஸ்கூட்டருக்கு அபராதம்
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார், கட்டிட காண்டிராக்டர். இவர் சொந்தமாக ஸ்கூட்டர் வைத்து பயன்படுத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 'நோ என்ட்ரி' மற்றும் 'ராங் சைடு டிரைவிங்' சென்றதற்காக ரூ.500 அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர் அஜிகுமார் இல்லை. அதுமட்டுமல்லாமல் அஜிகுமார் ஓட்டுவது ஸ்கூட்டர் ஆகும். இதை பார்த்த அஜிகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அஜிகுமாரின் வாகன பதிவு எண்ணை யாராவது போலியாக வேறு வாகனத்திற்கு பயன்படுத்தி வருகிறார்களா? அல்லது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்யும் போது தவறான பதிவு எண்ணில் வழக்குப்பதிவு செய்ய உள்ளார்களா? என்பது தெரியவில்லை. இதையடுத்து அஜிகுமார் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்.