தனியார் நிறுவன உரிமையாளருக்கு அபராதம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை செலுத்த தவறிய தனியார் நிறுவன உரிமையாளருக்கு அபராதம்;

Update: 2022-07-08 21:47 GMT

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக உதவி ஆணையாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுரண்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமானது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனமானது கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகையை செலுத்த தவறிய காரணத்திற்காக, செங்கோட்டை கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கு ஆலங்குளம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தற்போதைய அமலாக்க அதிகாரி சதீஷ் நடத்தி வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு கோர்ட்டு கலையும் வரை சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதேபோன்று நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக நெல்லை கோர்ட்டில் அமலாக்க அதிகாரி திலகர் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு கோர்ட்டு கலையும் வரை சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்