மூன்று சக்கர சைக்கிளில் ஐஸ்கட்டி கொண்டு சென்றவருக்கு அபராதம்

நெல்லை டவுனில் கடைகளுக்கு மூன்று சக்கர சைக்கிளில் ஐஸ்கட்டி கொண்டு சென்றவருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

Update: 2023-05-18 19:16 GMT

நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் உள்ள ஓட்டல்கள், உணவு வணிக நிறுவனங்களில், நெல்லை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் டைட்டஸ் பெர்னாண்டோ, சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா? என கூட்டாய்வு செய்யப்பட்டது. அப்போது 10 கடைகளில் இருந்து 148 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செயற்கை முறையில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சர்பத் மற்றும் குளிர்பானங்களில் பயன்படுத்துவதற்காக, சில்லறை கடைகளுக்கு வினியோகம் செய்ய சுகாதாரமற்ற நிலையில் 3 சக்கர சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதை தயாரித்து, வினியோகம் செய்தவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்