அனுமதிக்கப்படாத இடத்தில் கடைகள் அமைத்தால் அபராதம்

அனுமதிக்கப்படாத இடத்தில் கடைகள் அமைத்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.

Update: 2022-12-07 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை பகுதிகளில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு மானாமதுரை-இளையான்குடி சாலையில் ரூ.2 கோடி செலவில் புதிதாக வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு தற்போது வியாபாரிகள் அதில் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் வியாபாரிகள் சிலர் ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் அருகே மற்றும் மானாமதுரை-சிவகங்கை சாலை உள்ளிட்ட இடங்களில் காய்கறி கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக கோவில் பகுதிகளில் சுகாதார சீர்கேடையும் வியாபாரிகள் ஏற்படுத்தி வருவதாக நகராட்சி கமிஷனருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

நகராட்சி சார்பில் பலமுறை வியாபாரிகளுக்கு எச்சரித்தும், வியாபாரிகள் சிலர் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் நகராட்சிக்கு உட்பட்ட அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், காய்கறிகளும் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் சக்திவேல் எச்சரித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்