வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

மொரப்பூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

புதிய முறை அமல்

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

இந்த நிலையில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் மொரப்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய 30 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இந்த விபத்துகளில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் பெருமளவில் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதேபோல் வாகனங்களுக்கு ஆர்.சி. புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் நடப்பில் வைத்திருக்க வேண்டும். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்