புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

நாமக்கல் மாவட்டத்தில் 4 மாதங்களில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-26 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின்படி, மாவட்ட புகையிலை தடுப்பு அணி, மாவட்ட மனநல திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பள்ளிகல்வித்துறை, சுகாதாரத்துறை, மருந்துகட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் போலீசாருடன் இணைந்து கடந்த 4 மாதங்களாக பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட "கூல் லிப், ஹான்ஸ்" போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம், எருமப்பட்டி, புதுச்சத்திரம், வெப்படை, மெட்டலா, மங்களபுரம் மற்றும் பரமத்தி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தம் 35.594 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், சுகாதாரத் துறையின் மூலம் ரூ.1,85,600 என மொத்தம் ரூ.3,10,600 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. 9 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட "கூல் லிப் மற்றும் ஹான்ஸ்" போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வது பற்றி தெரியவந்தால் உடனடியாக 1098 மற்றும் 94861 11098 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்