மயில் மோதி இறந்த விபத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து சேதம்

பல்லடம் அருகே, மயில் மோதி இறந்த விபத்தில் அரசு பஸ் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது.

Update: 2023-06-07 17:46 GMT


பல்லடம் அருகே, மயில் மோதி இறந்த விபத்தில் அரசு பஸ் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ் மீது மோதிய மயில்

பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக டவுன் பஸ், எண் 30, நேற்று காலை பல்லடத்தில் இருந்து புளியம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பறந்து வந்த ஒரு பெண் மயில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது. கண்ணாடியில் மோதி பஸ்ஸின் உள்ளே விழுந்த மயில் அந்த இடத்திலேேய பரிதாபமாக இறந்தது. கண்ணாடி உடைந்து சிதறியதால் முன்புறம் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து பஸ் டிரைவர் சக்திகுமார், நடத்துனர் ராஜகோபால், ஆகியோர் அரசு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கு தகவல் அளித்து, மாற்றுப் பேருந்தை வரவழைத்து பயணிகளை அதில் ஏற்றி அனுப்பினர். பின்னர் பல்லடம் போலீஸ் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்தனர். பல்லடம் போலீசார் இது குறித்து திருப்பூர் வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையம் வந்த வனத்துறை காவலர்கள் இறந்த பெண் மயிலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேசிய பறவையான மயில், பஸ்ஸின் கண்ணாடியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்