நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி:பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்அனைத்துக்கட்சியினர் அறிவிப்பு

நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வருகிற 26-ந்தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.;

Update: 2023-04-19 18:45 GMT

விரிவாக்க பணி

கடலூர் - பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்தும், நெல்லிக்குப்பம் எஸ்.பி.ஐ. வரை சாலையின் இருபுறத்திலும் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ள பள்ளம் எடுக்கும் போது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கும், வணிகர் சங்க நிர்வாகி களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

அதாவது, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், வணிக சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை கூட்டம்

இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருதி, சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அவரது அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.

இதில் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தனி தாசில்தார் சுந்தரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சத்யா, நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சந்திரவேல் ஆகியோரும், வணிகர் சங்க செயலாளர் ஜே.ராமலிங்கம், சங்க பொருளாளர் அபுசலீம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க.கவுன்சிலர் முத்தமிழ், த.ம.மு.க. கவுன்சிலர் இக்பார், அ.தி.மு.க. கவுன்சிலர் புனிதவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டம்

கூட்டத்தில், அழைக்கப்படாத சிலரும் கலந்து கொண்டனர். இதை பார்த்த அரசியல் கட்சியினர், அவர்களை வெளியேற்றுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டும் பங்கேற்றனர். கூட்டத்தில் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அரசியல் கட்சியினர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டர் அகலத்துடன் அமைக்க வேண்டும். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற 26-ந்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்