தனியார் வாகனங்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை
தொலைதூரங்களில் இருந்து அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் தனியார் வாகனங்களுக்கு கட்டண தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
தொலைதூரங்களில் இருந்து அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் தனியார் வாகனங்களுக்கு கட்டண தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டணம் நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர். பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வசதியாக பள்ளி கல்வித்துறை மூலம் மாதந்தோறும் தலா ஒரு மாணவருக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் குக்கிராமங்களில் இருந்து அரசு பள்ளிகள் வெகு தொலைவில் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக மாணவர்களுக்கு வாகன கட்டண தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பயனாளிகளாக உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனியாக வங்கி கணக்கு தொடங்கி, அதன் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதிகாரிகள் நடவடிக்கை
இந்தநிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த தனியார் வாகனங்களுக்கு கடந்த 4 மாதங்களாக கட்டணம் செலுத்தாததால், கட்டண பாக்கியால் வாகனத்திற்கான கடன், காப்பீடு செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு வாகனங்களில் அழைத்து செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் பலர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி வழியாக அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினத்தந்தியில் நேற்று முன்தினம் பொதுமக்கள் கருத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் வாகன கட்டண தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
வரவு வைக்கப்படும்
இந்தநிலையில் நேற்று கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்று வந்த வாகனங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 4 மாத நிலுவைத்தொகையை வழங்கும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும், அதற்கான தொகை குறித்த விவரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் வாகனங்களுக்கான கட்டண தொகை ஓரிரு நாட்களுக்குள் பள்ளி தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கான உத்தரவை மாநில திட்ட அலுவலர் வாய்மொழி உத்தரவாக பிறப்பித்து உள்ளார் என தெரிவித்தனர். அதன்படி கடந்த 4 மாத நிலுவைத்தொகை வாகன ஓட்டுனர்களுக்கு கிடைக்க உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
'தினத்தந்தி'க்கு நன்றி
இதுகுறித்து தனியார் வாகனங்களை இயக்குபவர்கள் மீண்டும் அரசு பள்ளிகளுக்கு வாகனங்களை இயக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும். இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பள்ளி மாணவர்கள், தனியார் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.