பால் தினகரனின் மகள் திருமண வரவேற்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2023-09-13 15:35 GMT

சென்னை,

'இயேசு அழைக்கிறார்' நிறுவனர் மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன்-ஸ்டெல்லா தினகரனின் மகனும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரன்-இவாஞ்சலின் பால் தினகரன் தம்பதியினரின் மகள் ஸ்டெல்லா ரமோலாவுக்கும், கோவையை சேர்ந்த ஜோசுவா ஸ்டீபன்-கிரேஸ் ஜோசுவா தம்பதியினரின் மகன் டேனியல் டேவிட்சன்னுக்கும் கடந்த 11-ந்தேதி சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் தங்களுடைய மேற்படிப்பை அமெரிக்காவில் படித்தனர்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர வளாகத்தில் இன்று  நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியை மந்தைவெளி சி.எஸ்.ஐ. லூக்கா ஆலயத்தின் பாதிரியார் தனசேகர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

திருமண வரவேற்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது பால் தினகரன், 'மணமக்கள் டேனியல்-ஸ்டெல்லா தங்கள் வாழ்க்கை பயணத்தை கணவன்-மனைவியாக தொடங்கும் இந்த வேளையில், தங்கள் முதல் செய்கையாக, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு நன்கொடையை வழங்குகிறார்கள்' என்று தெரிவித்தார்.

அதன்படி, ரூ.2 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மணமக்கள் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் காருண்யா பல்கலைக்கழக அறங்காவலரும், இயேசு அழைக்கிறார் துணைத் தலைவருமான சாமுவேல் தினகரன், அவருடைய மனைவி டாக்டர் ஷில்பா மற்றும் ஷேரன் ஏஞ்சல் ஆகியோரும் அருகில் இருந்தனர்.

அதன்பின்னர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிஷா பானு முன்னிலையில், மணமக்கள் 'கேக்' வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

அதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, மதிவேந்தன், மனோ தங்கராஜ் உள்பட அமைச்சர்களும், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு திருச்சபை பாதிரியார்கள், ஊழியர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்