சிங்கம்புணரியில் புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரியில் புரவி எடுப்பு விழா நடந்தது.

Update: 2022-10-09 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் பிரசித்த பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுபெருமாள்அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிங்கம்புணரி கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை புரவி எடுப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த வைகாசி மாதத்தில் நடந்த புரவி எடுப்பு விழாவை தொடர்ந்து தற்போது புரட்டாசி மாதம் விழா கிராமத்தார்கள் சார்பில் நடத்தப்பட்டது. சிங்கம்புணரி வேளார் தெருவில் உள்ள புரவி செய்யும் வேளார்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தார்கள் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வேளார் பஜனை மடம் முன்பு உள்ள புரவி பொட்டலில் சுமார் 7 அடி உயரம் கொண்ட மண் குதிரை தயாரானது.

நேற்று மாலை கிராமத்தார்கள் ஒன்றிணைந்து புரவி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பூஜகர்கள், சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பக்தர்கள் புரவியை சுமந்து ஊர்வலமாக சந்திவீரன் கூடத்திற்கு கொண்டு சென்றனர். அதேபோல சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் இருந்து புறப்பட்ட வெண்கல புரவி சந்தி வீரன் கூடத்திற்கு வந்ததது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரண புஷ்கல தேவியருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்