படவேடு ஊராட்சியில் ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை
படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பேட்டை, துரிஞ்சாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பேட்டை, துரிஞ்சாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
100 நாள் வேலை வழங்கவில்லை
போளூர் தாலுகா படவேடு ஊராட்சி பெருமாள் பேட்டை, துரிஞ்சாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில், படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த எங்களுக்கு கடந்த ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்நாத்தூர் மதுரா ஏந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மேற்கண்ட பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். நாங்கள் விளைவிக்கும் பொருட்கள் அந்த பகுதியில் உள்ள பொதுவழிப் பாதை வழியாக தான் கொண்டு சென்று வருகின்றோம். இந்த பொது வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் விவசாயிகள் விளைவித்த கரும்பு, நெல், வாழை ஆகிய பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே பொதுவழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.