பசுவந்தனை, ஓட்டப்பிடாரம்கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் கோவில்களில் செவ்வாய்க்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஓட்டப்பிடாரம்:
பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் கோவில்களில் சித்திரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பசுவந்தனை
பசுவந்தனை ஆனந்தவல்லி உடனுறை கைலாசநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு அங்குரார்பணம், அனுக்ஹை வாங்குதல் நடந்தது. காலை 10.30 மணிக்கு கொடி பட்டம் எடுத்து ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. காலை 11 மணிக்கு கோவில் கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
தேரோட்டம்
இதில் கோவில் செயல்அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சப்பரவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் 9-வது நாளான மே 3-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-வது நாளான 4-ந்தேதி தீர்த்தவாரி அபிஷேகம் நடக்கிறது. 11-வது நாளான 5-ந்தேதி இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
விஸ்வநாதசுவாமி கோவில்
இதேபோன்று ஓட்டப்பிடாரம் அகிலாண்டேஸ்வரி உடனுறை விஸ்வநாதசுவாமி கோவிலில் சித்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு கொடிப்பட்டம் உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது. இதில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முப்பிடாதி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொணடனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 9-வது நாளான மே 3-ந் தேதி தேரோட்டமும், 10-வது நாளான 4-ந்தேதி தீர்த்தவாரியும், 11-வது நாளான 5-ந்திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.