அரசு பஸ் பழுதடைந்து நின்றதால் பயணிகள் அவதி
கூடலூர்-பந்தலூர் இடையே அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர்-பந்தலூர் இடையே அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பழுதடைந்த அரசு பஸ்
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுதுபார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக குந்தலாடி, பாட்டவயல், அய்யன்கொல்லிக்கு நேற்று மாலை 4.15 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள், மாணவர்கள் இருந்தனர். பாண்டியாறு குடோன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சரானது. இதனால் நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அவதி
இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். நடுவழியில் நின்றதால், பயணிகள் அவதி அடைந்தனர். பின்னர் நீண்ட நேரம் காத்து நின்ற பயணிகள், வேறு பஸ் வரும் என எதிர்பார்த்தனர். பின்னர் தனியார் வாகனங்களில் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது;-
இன்று (அதாவது நேற்று) மதியம் 12.15 மணிக்கு கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் பழுதடைந்து விட்டதால், அந்த பஸ் இயக்கப் படவில்லை. தொடர்ந்து 3.15 மணிக்கு அத்திக்குன்னாவுக்கு இயக்க வேண்டிய பஸ்சும் பழுதடைந்து விட்டதால் இயக்க வில்லை. இதனால் நீண்ட நேரம் காத்துக் கிடந்த நிலையில் 4.15 மணிக்கு வந்த பஸ்சில் அமர்ந்து ஊர்களுக்கு செல்லலாம் என நினைத்த நிலையில், அந்த பஸ் டயரும் பஞ்சர் ஆகி நடுவழியில் நின்று விட்டது. இவ்வாறு கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்களால் தொடர்ந்து அவதி அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.