மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் அவதி

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-06-23 19:22 GMT

மதுரை அண்ணா பஸ் நிலையம் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு முக்கிய பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து சென்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மாட்டுத்தாவணி பஸ் நிலையம் திறந்த பின்பு இந்த பஸ் நிலையம் செயல்படாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு சில பஸ்களே இங்கு வந்து சென்றன. சமீபத்தில் ஆவினில் இருந்து வரும் சாலையை ஒரு வழி பாதையாக போலீசார் மாற்றினர். இதனால் அனைத்து நகர பஸ்களும் அண்ணா பஸ் நிலையம் வந்து செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைத்திருந்தனர். இதன் காரணமாக பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, இருக்கைகள், தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. நிழற்குடை இல்லாததால் வெட்டவெளியில் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பயணிகள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அண்ணா பஸ் நிலையத்திற்கு போதிய அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்