எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் அவதி - செங்கல்பட்டில் பயணிகள் வாக்குவாதம்
எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
செங்கல்பட்டு,
மும்பையில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக தமிழக எல்லையான அரக்கோணம், செங்கல்பட்டு, திருச்சி வழியாக நாகர்கோவில் வரை செல்லும் சத்திரபதி சிவாஜி டெர்மினிர்ஸ் அதிவிரைவு ரெயில் மும்பை வி. டி. ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரெயிலில் காலை முதல் கழிவறை மற்றும் வாஷ்பேஷன்களில் தண்ணீர் வராமல் பயணிகள் முதல் குழந்தைகள் வரை அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
பொறுமையாக இருந்த பயணிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்திற்கு முன்பே நடுவழியிலேயே அவசரகால செயினை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரெயில்வே அதிகாரிகள் ரேணிகுண்டா ரெயில் நிலையில் தண்ணீர் நிரப்பப்படும் என உறுதியளித்துள்ளனர்.
தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என மாற்றி மாற்றி பேசியுள்ளனர். அதற்குள் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் வந்தது. கோபத்தின் உச்சிக்கே சென்ற பயணிகள் கடைசி வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகாரிகளோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக விழுப்புரத்தில் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும் என மீண்டும் உறுதியளித்ததின் பேரில் செங்கல்பட்டிலிருந்து அந்த ரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. இச்சம்பவத்தால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.