பயணியிடம் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு திருடியவர் கைது

Update: 2023-04-13 19:30 GMT

சூரமங்கலம்:-

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). இவர் கடந்த வாரம் பெற்றோருடன் ரெயிலில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர்கள் கடந்த 8-ந் தேதி காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் ஏறி கோவைக்கு புறப்பட்டனர். இந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் விஷ்ணு கீழே இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறினார். அப்போது இருக்கையில் வைத்திருந்த அவருடைய பேக்கை காணவில்லை. இதில் 2 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தது. பின்னர் இதுகுறித்து விஷ்ணு சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஷ்ணுவின் பேக்கை திருடியது சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்