வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கடும் வாக்குவாதம்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டிக்கெட் பரிசோதகர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு மாலை 3.55 மணிக்கு வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.55 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலைய 4-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. அப்போது விழுப்புரத்தில் இருந்து முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்த பயணிகள் பலர், முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்தனர். இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். உடனே அவர்கள், இதுபற்றி ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டு அவர்களை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு கூறினார்கள்.
பயணிகளுக்கிடையே வாக்குவாதம்
அதன்படி ரெயில்வே டிக்கெட் பரிசோதகரும் அந்த பயணிகளிடம் சென்று முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அந்த பயணிகள் செல்ல மறுத்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்துள்ள பயணிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனிடையே அந்த ரெயில், மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டது. உடனே டிக்கெட் பரிசோதகர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரெயில் நடைமேடையிலேயே நின்றது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அங்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பிரச்சினைக்குரிய பயணிகளை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றது. இந்த சம்பவத்தினால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.