நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து -அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நாகையில் இருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-09-20 20:47 GMT

நாகப்பட்டினம்,

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. இங்கு பன்னாட்டு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான நாகையில் இருந்து கைவினை பொருட்கள் உள்ளிட்டவை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தென்னிந்திய பகுதிகளுக்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் துறைமுகமாகவும் நாகை துறைமுகம் செயல்பட்டு வந்தது.

பொலிவிழந்தது

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில், ஆடை, ஆபரணங்கள், நாகையில் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறு புகழ்பெற்று விளங்கிய துறைமுகம் காலப்போக்கில் பொலிவிழந்தது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து

இதனையடுத்து சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என நாகை மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை நாடுகள் இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி அறிவித்தார்.

பணிகள் தொடக்கம்

அதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் நேற்று தூர்வாரும் பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

பின்னர் துறைமுகம் அமையவுள்ள இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் ஏறி கடலில் 2 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று கப்பல் செல்லும் வழித்தடத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து துறைமுகத்தில் நடந்து வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2½ மணி நேரத்தில் செல்லலாம்

நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பலில் 2½ மணி நேரத்தில் சென்று விடலாம் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் கப்பல் நிற்கும் இடத்தில் மணல் திட்டுக்கல் உள்ளதால் அந்த இடத்தை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 மீட்டர் ஆழத்திற்கு மேற்கொள்ளப்படும். இங்கு தூர் வாரப்படும் போது பயணிகள் கப்பல் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

150 பயணிகள் பயணம்

மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி பகுதியில் இருந்து தான் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் வரும். இந்த கப்பல் 150 பயணிகளை ஏற்றிச்செல்லும். பயணிகளை பாதுகாப்புடன் அழைத்து செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

நாகை துறைமுகத்தில் கப்பல் நுழையும்போது தமிழ்நாட்டின் கலாசார சின்னங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படும். எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்படும்.

அக்டோபர் 15-ந் தேதி முதல் இயக்கப்படும்

இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் 2-ந்தேதிக்குள் நிறைவு பெறும்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் அனுமதியுடன் அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்